சேலத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசியல் சூழல் குறித்தும், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) ஆட்சி நிர்வாகம் குறித்தும் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அ.தி.மு.க.விலிருந்து பிரிந்து த.வெ.க.வுக்குச் சென்றவர்களின் நிலைமை தற்போது பரிதாபகரமாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தன்னை எப்போது வேண்டுமானாலும் தொண்டர்கள் சந்திக்க முடியும் என்றும், ஆனால் தி.மு.க., த.வெ.க. தலைவர்களை அவ்வளவு எளிதில் யாரும் பார்த்துவிட முடியாது என்றும் சாடினார்.
அரசியல் காட்சிகள் மாறும்போது பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க.விற்கே திரும்புவார்கள் என்றும், அப்படி வருபவர்கள் ‘பூஜ்ஜியத்தில்’ இருந்துதான் தங்களது அரசியல் பயணத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் திட்டவட்டமாகக் கூறினார். மேலும், த.வெ.க. தலைவர் விஜய் தனக்குத் தானே நம்பிக்கை இல்லாமல் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதாக விமர்சித்த இபிஎஸ், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோரின் உருவப்படங்களை வைத்து ஊர் ஊராகச் சென்று வாக்குச் சேகரித்து த.வெ.க. பெற்ற வெற்றியை ஒரு ‘உண்மையான வெற்றி’ என்று ஏற்றுக்கொள்ள முடியாது என ஆவேசமாகத் தெரிவித்தார்.
த.வெ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 60 நாட்களிலேயே முந்தைய தி.மு.க. ஆட்சியைப் போல கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருட்களின் நடமாட்டம் பன்மடங்கு அதிகரித்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். தேர்தலில் ஜெயிக்க மாட்டோம் என்ற எண்ணத்தில் த.வெ.க. தலைவர் விஜய் வாரி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், தற்போது போதிய நிதி ஆதாரம் இல்லாமல் அந்த அரசு தத்தளித்து வருவதாகக் குறிப்பிட்டார். த.வெ.க. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவில்லை, மாறாக தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் தயவில்தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது; அந்தக் கூட்டணிக் கட்சிகள் எப்போது வேண்டுமானாலும் கைகழுவிவிடலாம் என்பதால் இந்த அரசு எந்த நேரத்திலும் கவிழும் சூழலிலேயே உள்ளது என்றும் எச்சரித்தார்.
அதே வேளையில், தற்போதைய ஆட்சியில் தகுதியானவர்களுக்குப் பதவிகள் வழங்கப்படாமல், சினிமா தயாரிப்பாளருக்கும், முதலமைச்சரின் ஆலோசகருக்கும் முக்கியப் பதவிகள் தாராளமாக வழங்கப்பட்டு வருவதைக் கேலி செய்த அவர், வரும் நாட்களில் முதலமைச்சருக்கு ஒப்பனை (மேக்கப்) செய்பவர்களுக்கும் கூட பதவிகள் வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று சாடினார். இறுதியாக, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறுவது உறுதி என்பதால், தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் களப்பணியாற்ற வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
