தமிழகத்தில் பசுக்கள் மற்றும் கன்றுகளை வெட்டுவதற்குத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக இடைக்காலத் தடை விதித்துள்ளது. முன்னதாக, உரிமம் பெற்ற இறைச்சிக் கூடங்கள் தவிர வேறு எங்கும் மாடுகளை வெட்டக் கூடாது என்று கடந்த மே 27-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவு மாநில அளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது
