உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தில் 7 வயது சிறுமி மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அந்த வளாகத்தில் வேலை செய்து வந்த வினய் குமார் மற்றும் சாஹிபுதீன் ஆகிய இரு தொழிலாளர்கள், அச்சிறுமியிடம் முன்பு பழகியிருந்த பழக்கத்தைப் பயன்படுத்தி, சிப்ஸ் மற்றும் குளிர்பானம் வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி மாலுக்குள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை இருவரும் மாறி மாறி வன்கொடுமை செய்ததோடு, இரும்பு கம்பியால் அவரது தலையில் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளனர்.
பின்னர், அடையாளம் தெரியாமல் மறைப்பதற்காக சிறுமியின் உடலை மாலில் உள்ள லிப்ட் துவாரத்தின் வழியாகப் பாதாள அறைக்குள் வீசிச் சென்றுள்ளனர். இக்கொடூரச் சம்பவம் நடந்த போது அந்த கட்டுமானப் பகுதியில் போதிய மின்சார வசதி இல்லாததோடு, நுழைவாயிலிலும் எந்தவொரு பாதுகாப்பும் இருக்கவில்லை.
அதோடு அங்கு பணியில் இருந்த ஒரே ஒரு இரவு நேரப் பாதுகாவலர், அச்சமயம் சிறுமியின் “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்ற அலறல் சத்தத்தைக் கேட்டும், அது அருகில் உள்ள குடிசைப் பகுதியிலிருந்து வரும் சத்தம் என்று தவறாக நினைத்து அலட்சியமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் காணாமல் போன சிறுமியைத் தேடி வந்த போலீசார், நள்ளிரவில் செல்போன் டார்ச் உதவியுடன் தேடி அவதிப்பட்டு சிறுமியின் உடலை மீட்டனர். பிரேதப் பரிசோதனையில் சிறுமியின் உடலில் 25-க்கும் மேற்பட்ட காயங்களும், தலையில் மட்டும் 17 வெட்டுக் காயங்களும் இருந்தது அம்பலமாகியுள்ளது. தப்பியோட முயன்ற குற்றவாளிகள் இருவரையும் தற்போது போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
