தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக, தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) முக்கிய பேச்சாளரான லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முன்னிலையில் முதலமைச்சர் விஜய் இதற்கான அதிகாரப்பூர்வ நியமன ஆணையை லயோலா மணியிடம் வழங்கினார். கல்வித்துறையின் முக்கியப் பிரிவுகளில் ஒன்றான பாடநூல் கழகத்தின் செயல்பாடுகளை இனி லயோலா மணி தலைமையிலான குழு கவனிக்கவுள்ளது.
இதற்கு முந்தைய தி.மு.க ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக பிரபல பேச்சாளர் திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்டு அந்தப் பதவியில் செயல்பட்டு வந்தார். தற்போது த.வெ.க ஆட்சியில் கல்வித்துறையின் இந்த மிக முக்கியப் பொறுப்பு லயோலா மணிக்கு வழங்கப்பட்டிருப்பது அரசியல் மற்றும் கல்வி வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
