சிவகாசியில் நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார். தி.மு.க.வை எதிர்த்துப் பாரம்பரியமாக அரசியல் செய்து வரும் அ.தி.மு.க.வினருக்கு, நேற்று முளைத்த காளானான த.வெ.க. எல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்றும், அதனை அ.தி.மு.க.வினர் எளிதாக ஊதித் தள்ளிவிடுவார்கள் என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சியினர் கடுமையாக உழைத்த போதிலும், இந்தத் தொகுதிக்குச் சம்பந்தமே இல்லாத த.வெ.க. வேட்பாளர் ஆசைவார்த்தைகளைக் கூறி வெற்றி பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், த.வெ.க.வுக்கு உண்மையான மக்கள் செல்வாக்கு இருந்திருந்தால் தமிழகத்தில் 150 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்றும், தற்போதைய த.வெ.க.வின் வெற்றி நிலையான ஒன்று அல்ல என்றும் கடுமையாக விமர்சித்தார்.
மேலும், த.வெ.க.வினர் காட்டும் ஆசைவார்த்தைகளுக்கு மயங்கி அ.தி.மு.க.வில் இருந்து சிலர் சென்றதால் இயக்கம் ஒருபோதும் அழிந்துவிடாது என்றும், சென்றவர்கள் அனைவரும் விரைவில் தாய் கழகமான அ.தி.மு.க.விற்கே திரும்பி வருவார்கள் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய முதலமைச்சர் பதவியில் இருக்கும் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்ணியக் குறைவாகப் பேசுவதை மக்கள் ரசிக்கவில்லை என்றும், மு.க.ஸ்டாலினுக்கு எப்போது கோபம் வருகிறதோ அப்போது தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி இருக்காது என்றும் எச்சரித்தார். முதலமைச்சர் விஜய் கரூரில் நடந்துகொண்ட விதம் வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்ட கே.டி.ராஜேந்திரபாலாஜி, தமிழகத்தை ஆண்ட எந்தவொரு முதலமைச்சரும் இதுபோன்று நடந்துகொண்டதில்லை எனத் தனது பேச்சில் சாடினார்.
