மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வெறும் 10 ரூபாய் டீ பில்லுக்காக ஏற்பட்ட வாக்குவாதம், ஓட்டுநர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்படும் துயரத்தில் முடிந்துள்ளது. நாக்பூரில் சஹாரே பெட்ரோல் பங்க் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அலங்காரப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தின் ஓட்டுநரான மனோஜ் விஸ்வநாத் யாதவ் என்பவர் அப்பகுதியில் உள்ள பான் கடை ஒன்றில் டீ குடித்த மனோஜ், அதற்கான தொகையைச் செலுத்துவதில் அங்கிருந்த கடை உரிமையாளர் கைலாஷ் கண்வீர் என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வெறும் 10 ரூபாய்க்காகத் தொடங்கிய இந்தச் சண்டை, அடுத்த சில நிமிடங்களில் இருவருக்குள்ளும் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற கடைக்காரர் கைலாஷ் கண்வீர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஓட்டுநர் மனோஜின் கழுத்தில் பலமாகக் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மனோஜ், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீஸார் உடனடியாக விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோட முயன்ற கொலையாளி கைலாஷை சம்பவ இடத்திலேயே மடக்கிப் பிடித்த போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொடூரக் கொலைக்கு வெறும் 10 ரூபாய் தகராறு மட்டும்தான் காரணமா அல்லது அவர்களுக்குள் முன்விரோதம் ஏதேனும் இருந்ததா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
