ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கநகரில் 13 வயது சிறுமி கடத்தப்பட்டு, பல்வேறு ஹோட்டல்களில் பல நாட்களாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் நான்கு ஹோட்டல்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் அதிரடியாக இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், தான் வலியால் துடிக்கும்போது எல்லாம் அவர்கள் தன்னை மது அருந்த வற்புறுத்தியதாகக் கூறியுள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் இதுவரை சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் பத்துக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.