அமெரிக்காவில் நடைபெற்ற ‘வீ த லீடர்ஸ்’ (We the Leaders) நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை, தமிழக அரசியல் மற்றும் தற்போதைய ஆளுங்கட்சியான தவெக அரசு குறித்துப் பேசியுள்ள கருத்துக்கள் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன!

​இந்த நிகழ்வில் மேடையில்  பேசிய அண்ணாமலை, ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகள் குறித்து மிகவும் ஓப்பனான பல கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

​”புதிதாக வந்த அமைச்சர்களுக்குக் காலம் கொடுக்க வேண்டாமா?!”

மேடையில் அதிரடியாகப் பேசிய அண்ணாமலை, “தற்போதைய ஆளுங்கட்சியான தவெக அரசுக்கு நாம் ஓராண்டு காலம் அவகாசம் கொடுப்போம். அதுவரை அவர்களுக்கு எந்தவிதமான தடைகளையும் போடக்கூடாது. புதிதாகப் பதவிக்கு வந்திருக்கும் அமைச்சர்களுக்குக் கால அவகாசம் கொடுக்காமல், அவர்களால் எப்படி உடனடியாகச் சிறப்பாகச் செயல்பட முடியும்?” என்று தவெக அரசுக்கு ஆதரவாகக் கேள்வி எழுப்பியுள்ளார்!

ஊழலுக்கு எதிராகத் தொடரும் யுத்தம்!

மேலும் ஊழல் குறித்துப் பேசிய அவர், “நான் ஊழலுக்கு எதிராகத் தொடர்ந்து பேசுவேன். இதற்காகத் தனிப்பட்ட முறையில் பல வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்துள்ளேன். தவெக அரசு நல்லது செய்தால், அதனை முதல் ஆளாக நின்று நாம் வரவேற்போம். குறிப்பாக, ஊழலைக் கட்டுப்படுத்துபவர்களை நாம் எப்போதுமே வரவேற்போம்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்!