மத்தியப் பிரதேச மாநிலம் அசோக் நகர் மாவட்டத்தில் உள்ள சகராயி காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேவார்ச்சி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது, உள்ளே புகுந்த வாலிபர் ஒருவர் வகுப்பறையில் இருந்த நாற்காலிகளை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

இதனைத் தட்டிக்கேட்ட பெண் ஆசிரியரை, அந்த நபர் தரக்குறைவாகப் பேசி கடுமையான மிரட்டல் விடுத்தார். இந்தச் செயலால் வகுப்பறையில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த பயத்திற்கும் பதற்றத்திற்கும் ஆளானார்கள்.

தகவலறிந்த சகராயி காவல் துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட அந்த வாலிபரைக் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கல்வி பயிலும் இடத்தில் பெண் ஆசிரியரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என்று பெற்றோர்களும் ஆசிரியர் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.