மும்பையின் பைகுல்லா பகுதியில் நடைபெற்ற மொஹரம் ஊர்வலத்தின்போது, வலி நிவாரணி மாத்திரைகள் என்று கூறி பொதுமக்களுக்கு எலி விஷம் கலந்த மாத்திரைகளை விநியோகித்த அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விஷ மாத்திரைகளை உட்கொண்ட சில இளைஞர்களுக்கு உடனடியாக கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டதால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட மும்பை காவல்துறையினர், புனேவைச் சேர்ந்த ஃபயாஸ் பிரேம்ஜி என்ற 39 வயது நபரை அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 14,900 விஷ மாத்திரைகள் மற்றும் 50 கிலோ எலி விஷப் பொடியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
விசாரணையில், அந்த நபர் ஆன்லைன் மூலம் சுமார் 30,000 காலி கேப்சூல்களை ஆர்டர் செய்து, அதில் தலா ஒரு கிராம் வீதம் மிகவும் வீரியமிக்க ‘ஜிங்க் பாஸ்பைடு’ என்ற எலி விஷத்தை நிரப்பி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
இந்தச் செயலுக்குப் பின்னால் ‘லோன் வுல்ஃப்’ தாக்குதல் போன்ற திட்டமிட்ட சதி உள்ளதா அல்லது ஏதேனும் சர்வதேச பயங்கரவாதத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
முன்னதாக 2025-ஆம் ஆண்டில் ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்கு அந்த நபர் பயணம் மேற்கொண்டிருப்பது தெரியவந்துள்ளதால், இந்த விவகாரத்தை காவல்துறை மிகக் கடுமையான குற்றமாகப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
