வழக்கமாகப் பள்ளிக் குழந்தைகள் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டும் 14 வயதிலேயே, இந்தியாவின் இளம் சாதனையாளர் ஜெய்னம் ஜெயின், துபாயில் தனது சொந்த ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

‘மெங்கோ இன்ஜின்’ என்ற தனது நிறுவனத்தின் அலுவலகத்தை, உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவின் 141-வது மாடியில் அமைத்து சாதனை படைத்துள்ளார். பிற நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை மேம்படுத்த ஏஐ தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இவரது நிறுவனம் கற்றுக்கொடுக்கிறது.

தனது 6 வயதிலேயே தந்தை அழைத்துச் சென்ற வணிகக் கூட்டங்களின் மூலம் தொழில்முனைவு ஆர்வம் கொண்ட இவர், 13 வயதிலேயே 10-ஆம் வகுப்புத் தேர்வை வெற்றிகரமாக முடித்துக் காட்டியுள்ளார்.

சிறு வயதிலேயே பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் ஜெய்னம், இதுவரை 2 காப்புரிமைகளை பெற்றுள்ளார், மேலும் 3 காப்புரிமை பெறும் முயற்சியில் உள்ளார். ‘டெட்எக்ஸ்’ தளத்தில் உரையாற்றியுள்ள இவர், ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார். தனது யூடியூப் சேனலில் லட்சக்கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள இவர், கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து பல கடினமான சவால்களை ஏற்றுத் தன்னை மேம்படுத்தி வருகிறார்.

“>

 

விடாமுயற்சியும், சரியான திட்டமிடலும் இருந்தால் வயது ஒரு தடையல்ல என்பதை உலகுக்கு உணர்த்தும் இவருடைய இந்தத் தொழில்முனைவுக் கதை, தற்போது சமூக வலைதளங்களில் பலருக்கும் பெரும் உத்வேகத்தை அளித்து வருகிறது.