திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன அந்த தம்பதி, தங்களின் வரவு செலவு கணக்கை முதன்முறையாகப் பார்த்தபோது அதிர்ந்து போயுள்ளனர். சம்பளம் வந்த உடனே அது எங்கே போகிறது என்றே தெரியாமல் ‘சம்பளத்திலிருந்து அடுத்த சம்பளம் வரை’ (Salary to Salary) என்ற இக்கட்டான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

​அவர்களது மாத வருமானமான 1.70 லட்சத்தில், 86,000 ரூபாய் லோன் இஎம்ஐ-க்கே (EMI) சென்றுவிடுகிறது. இதில் பெற்றோரின் பழைய கடனை அடைக்க வாங்கிய 30 லட்சம் ரூபாய் பெர்சனல் லோன், பைக் லோன், எஜுகேஷன் லோன் மற்றும் போன் இஎம்ஐ ஆகியவை அடங்கும். இதுபோக வாடகை, மளிகை, மின்சாரம் போன்ற அத்தியாவசிய வீட்டுச் செலவுகளுக்கு 53,500 ரூபாயும், இதர தனிப்பட்ட செலவுகளுக்கு 28,000 ரூபாயும் காலியாகிறது.

​இறுதியில் கையில் வெறும் 2,520 ரூபாய் மட்டுமே மிஞ்சுவதால், எதிர்காலம், குழந்தை மற்றும் அவசர கால நிதி (Emergency Fund) போன்றவற்றுக்குச் சேமிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதைப் பார்த்த நெட்டிசன்கள், “முதலில் ஊர் சுற்றுவதையும் ஆடம்பரச் செலவுகளையும் குறைத்துவிட்டு, பெர்சனல் லோனை அடைக்கப் பாருங்கள்” எனப் பல ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.