திருப்பத்தூர்: பள்ளிக்கு ஒழுக்கமாக வரவேண்டும் என்று ஆசிரியர்கள் கூறுவது மாணவர்களின் நல்வாழ்விற்காகத்தான். ஆனால், பலமுறை அறிவுறுத்தியும் ஆசிரியரின் பேச்சைக் கேட்காத மாணவர்களுக்கு, பள்ளி வளாகத்திலேயே உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் முடி திருத்தம் செய்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

​திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் இந்த அதிரடி சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள், சரியாக முடி வெட்டாமல் ‘ஸ்டைலாக’ நீண்ட தலைமுடியுடன் பள்ளிக்கு வந்துள்ளனர். இதைப் பார்த்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர், மாணவர்களை அழைத்து முறையாக முடி திருத்தம் செய்துவிட்டு வருமாறு பலமுறை எச்சரித்துள்ளார்.

​ஆசிரியரின் எச்சரிக்கையை மாணவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. வழக்கம்போல அதே நீண்ட முடியுடன் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த உடற்கல்வி ஆசிரியர், மாணவர்களுக்குப் புத்தி புகட்ட ஒரு அதிரடி முடிவை எடுத்தார்.

​பள்ளி வளாகத்திற்குள்ளேயே முடி திருத்துபவர் ஒருவரை வரவழைத்தார். விதிகளை மீறி நீண்ட முடியுடன் வந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்களை வரிசையாக உட்கார வைத்து, அங்கேயே அவர்களுக்கு முடி திருத்தம் செய்ய ஏற்பாடு செய்தார். இந்த ஒட்டுமொத்த சம்பவத்தையும் அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர்.

​தற்போது இந்த வீடியோ ‘எக்ஸ்’ (ட்விட்டர்) சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகி பயங்கர வைரலாகி வருகிறது. ஆசிரியரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். “மாணவர்களைக் கண்டிப்பதில் தவறில்லை, ஆனால் இப்படி வளாகத்திலேயே செய்தது கொஞ்சம் ஓவர்” என ஒரு தரப்பினரும், “இன்றைய காலத்து மாணவர்களுக்கு இந்த மாதிரி கண்டிப்பு தான் சரி” என மற்றொரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர்.