மும்பை புறநகர்ப் பகுதியான பயந்தர் கிழக்கில், புலம்பெயர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் பலர் தங்களின் குறுகலான தங்குமிடங்களில் நிலவும் கடுமையான வெப்பத்தைத் தாங்க முடியாமல், திறந்தவெளி மைதானத்தில் படுத்து உறங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், தொழிலாளர்கள் பலர் வெறும் பிளாஸ்டிக் சாக்குகளை மட்டுமே படுக்கையாகப் பயன்படுத்தி திறந்தவெளியில் வரிசையாக உறங்குவது பதிவாகியுள்ளது.

அதில் பேசிய உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, தங்களின் சிறிய அறைகளுக்குள் வெப்பம் தாங்க முடியாத அளவுக்கு இருப்பதால், கடந்த ஒன்றரை மாதங்களாக நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இங்குதான் படுத்து உறங்குவதாகக் கூறியுள்ளார்.

அதிகாலை 4 மணிக்கே எழுந்து தங்குமிடம் சென்று, குளித்துச் சாப்பிட்டுவிட்டு வேலைக்குக் கிளம்புவதை அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். மாதம் 18,000 ரூபாய் சம்பாதிக்கும் அந்தத் தொழிலாளி, “மும்பையில் தங்கிப் பணம் சம்பாதிப்பது மிகவும் கடினமானது” என்று தங்களின் வாழ்வாதார நெருக்கடியைக் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் மத்தியில் இருவேறான கருத்துகள் எழுந்துள்ளன. ஒரு தரப்பினர் இந்த ஏழைத் தொழிலாளர்களின் அவல நிலையைக் கண்டு அனுதாபம் தெரிவித்து வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் பொது மைதானங்களை வீணாக்குவதாகக் கூறி இவர்களைத் தங்களது சொந்த ஊருக்கே திரும்பிச் செல்லுமாறு விமர்சித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by DK Bhai Gupta Mumbai (@dk_bhai_gupta_mumbai)

“>

இந்தியாவின் நிதித் தலைநகரமான மும்பையில், குறைந்த வருவாய் ஈட்டும் தொழிலாளர்களின் மோசமான தங்குமிட வசதி, கட்டுப்படியாகாத வீட்டு வாடகை மற்றும் புலம்பெயர்ந்தோரின் அவலநிலை ஆகியவற்றை இந்தச் சம்பவம் மீண்டும் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.