தமிழக உள்ளாட்சித் தேர்தலில் ஒரே ஒரு மேயர் இடத்திலாவது தவெக (தமிழக வெற்றிக் கழகம்) வெற்றி பெற்றால், எனது ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சவால் விடுத்துள்ளார்.

மேலும், திமுக தலைவர்களான ஸ்டாலினுக்கோ அல்லது உதயநிதிக்கோ சவால் விடும் தகுதி விசிக-வின் ஆதவ் அர்ஜுனாவுக்கு இல்லை என்றும், ஒருவேளை தவெக தலைவர் விஜய்க்கு ஏதேனும் அரசியல் ஆபத்து வருகிறது என்றால் அதற்கு ஆதவ் அர்ஜுனாதான் காரணமாக இருப்பார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இனிமேல் எந்தக் காலத்திலும் முதுகில் குத்திவிட்டு ஓடியவர்களைத் திமுகவில் சேர்க்க மாட்டோம் என்றும், அவர்களோடு இனி ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது என்றும், கட்சித் தொண்டர்களும் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் மிகக் காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளார்.

திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பாகப் பேசிய ஆர்.எஸ்.பாரதி, தங்களுக்குள் கூட்டணி தொடர்வதாகப் ப.சிதம்பரம் கூறியிருந்தாலும், தாங்கள் காங்கிரஸ் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக ‘டைவர்ஸ்’  செய்துவிட்டதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

தங்களை விட்டுச் சென்ற சில கட்சிகள், தங்களுடன் முறையாக ஆலோசனை செய்துவிட்டுச் சென்றன என்றும், அது ஒரு வகையான டைவர்ஸ் என்றும் அவர் விளக்கினார்.

ஆனால், தற்போது காங்கிரஸ் கட்சியுடன் செய்துள்ள டைவர்ஸ் என்பது முற்றிலும் வேறு வகையானது என்று குறிப்பிட்ட அவர், இனி காங்கிரஸ் கட்சி இருக்கும் எந்தவொரு கூட்டணியிலும் திமுக இடம்பெறாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.