கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சொரணூர் பகுதியைச் சேர்ந்த ஜாசிம் என்பவர், அப்பகுதியில் கோழி இறைச்சி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு விற்பனை செய்வதற்காக, மன்னார்காட்டில் இருந்து வழக்கம்போல் கோழிகள் கொண்டு வரப்பட்டன. அப்படி கொண்டு வரப்பட்ட கோழிகளில், ஒரு கோழி மட்டும் வித்தியாசமாக இருப்பதைக் கண்டு ஜாசிம் பெரும் ஆச்சரியமடைந்தார். உற்று நோக்கியபோது, அந்த குறிப்பிட்ட கோழிக்கு வழக்கமான இரண்டு கால்களுக்கும் பதிலாக மொத்தம் 4 கால்கள் இருந்தது தெரியவந்தது. அதில் இரண்டு கால்கள் நீளமாகவும், மற்ற இரண்டு கால்கள் சிறியதாகவும் காணப்பட்டன

இந்த வினோத கோழி நடக்கும் போது, அதன் பின்புறம் உள்ள இரண்டு சிறிய கால்களும் தரையைத் தொடுவதில்லை என்று கூறப்படுகிறது. இந்த அபூர்வமான 4 கால் கோழி குறித்த தகவல் அந்தப் பகுதியில் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் ஜாசிமின் கடைக்கு ஆர்வத்துடன் வந்து அதனை வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர். பொதுமக்கள் மத்தியில் இந்த வினோத கோழி பெரும் வேடிக்கைப் பொருளாக மாறியுள்ள நிலையில், பார்ப்பதற்கு அரியதாக இருக்கும் இந்தக் கோழியைத் தான் இறைச்சிக்காக யாருக்கும் விற்பனை செய்யப் போவதில்லை என்றும், அதனைத் தொடர்ந்து தன்னிடம் வளர்க்கப் போவதாகவும் கடை உரிமையாளர் ஜாசிம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.