தமிழக அரசியல் களத்தில் அதிமுக மற்றும் தவெக தலைவர்களுக்கு இடையே தினம்தினம் வார்த்தைப் போர்கள் உச்சக்கட்டத்தை எட்டி வருகின்றன. இந்நிலையில், தற்போதைய தவெக ஆட்சியில் உண்மையான அதிகாரத்தில் இருப்பது யார் என்பதே தெரியவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எழுப்பியுள்ள பகிரங்கக் கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஆர்.பி. உதயகுமார், தற்போதைய ஆட்சி நிர்வாகத்தின் போக்கு குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மாநிலத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, மக்கள் தங்கள் அன்றாடக் குறைகளையும் பிரச்சினைகளையும் கொண்டு சென்று முறையிடுவதற்கு யார் இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் தவித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இன்னைக்கு மக்கள் தன்னோட குறைகளைச் சொல்ல யார்கிட்ட போறதுன்னே தெரியாம முழிக்கிறாங்க. தமிழ்நாட்டுல இப்போ யாரு நிஜமான முதலமைச்சர்? விஜய்யா, இல்லை அவரோட நண்பர்கள் வட்டாரத்தில் இருக்குற ஜெகதீஷ் பழனிச்சாமியா, விஷ்ணு ரெட்டியா, ஜான் ஆரோக்கியசாமியா?” என்று மூன்று பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு அதிரடியாக வினா எழுப்பினார்.
மேலும், தற்போதைய அரசு ஒரு கையாலாகாத மற்றும் மக்களால் நேரடியாக அணுக முடியாத ஒரு ஆட்சியாக முற்றிலும் மாறிவிட்டது என்றும் ஆர்.பி. உதயகுமார் சாடினார். ஆட்சியின் பின்னணியில் யார் செயல்படுகிறார்கள் என்ற அவரது இந்த பகீர் குற்றச்சாட்டு, சமூக வலைத்தளங்களிலும் அரசியல் மேடைகளிலும் தற்போது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
