முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, மதுரை பழங்காநத்தம் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், பள்ளி குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்களும், நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்மணிகளுக்கு ₹4 லட்சம் மதிப்பிலான மூன்று சக்கர ஆட்டோக்களும் வழங்கப்பட்டன. இதன் பின்னர் மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் மூர்த்தி, தேர்தல் தோல்வி குறித்து மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, ஆவேசமாகப் பேசினார். “நம்முடைய ஆட்சியில் தலைவர் மக்களுக்காகப் பல முன்னோடித் திட்டங்களைச் செய்துள்ளார்; ஆனால், அதைப் பற்றி இப்போது பேசுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை; மக்கள் நமக்கு ஒரு நல்ல பாடம் கொடுத்திருக்கிறார்கள், அதற்கு நன்றி” என்று அவர் கூறினார்.

இதைக் கேட்டு அங்கிருந்த தொண்டர்கள் கைதட்டியதால் ஆத்திரமடைந்த அவர், “தோற்றுப் போனதற்கு கைதட்டுங்கள், அதனால்தான் நாம் விளங்காமல் உட்கார்ந்திருக்கிறோம்; திமுக நாசமாகப் போனதற்குக் காரணமே திமுககாரன்தான்” என  சாடினார். மேலும், பேரன், பேத்திகள் சொன்னார்கள் என்பதற்காக மக்கள் ஓட்டுப் போட்டுள்ளதாகவும், இனி மக்களுக்குச் செய்த நன்மைகளைப் பேசி வாக்கு கேட்கத் தேவையில்லை என்றும் அவர் குமுறலாகத் தெரிவித்தார். மக்கள் ஒரு முடிவெடுத்து மாற்றுத் தரப்பினருக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளதால், இனி அதைப் பற்றிப் பேசாமல் உண்மையான ‘ஒரிஜினல்’ திமுகவை வளர்க்கும் கட்சிப் பணியில் மட்டும் தொண்டர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இனி யாரையும் வெத்தலை பாக்கு வைத்து அழைக்கத் தேவையில்லை என்றும் அவர் தொண்டர்களுக்குத் திட்டவட்டமாக அறிவுறுத்தினார்.