காங்கிரஸ் எம்.பி கிறிஸ்டோபர் திலக் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் குறித்துப் பேசியுள்ளார். முதலமைச்சர் விஜய் தற்போது பிரதமரைச் சந்திப்பதற்காக அரசு முறைப் பயணமாகவே டெல்லி வந்துவிட்டுச் சென்றுள்ளதாகத் தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வரும் ஜூன் 11-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் விஜய் மீண்டும் டெல்லி வரவுள்ளதாகவும், அப்போது அவர் கண்டிப்பாகச் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை நேரில் சந்தித்துப் பேசுவார் என்றும் கிறிஸ்டோபர் திலக் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் தற்போதைய டெல்லி பயணத்தில் காங்கிரஸ் தலைவர்களுடனான சந்திப்பு ரத்தானது குறித்துப் பேசிய அவர், இதில் யூகங்களுக்கு இடமில்லை என்று கூறினார். தற்போது கர்நாடக மாநிலத் தலைவர்கள் டெல்லி வந்துள்ளதாலும், ஜார்க்கண்ட் ராஜ்யசபா எம்பி விவகாரம் தொடர்பாகக் கடந்த இரண்டு நாட்களாகக் காங்கிரஸ் கட்சிக்குள் தீவிர ஆலோசனைகள் நடந்து வருவதாலும் இந்தச் சந்திப்பு ரத்தாகி இருக்கலாம் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

கட்சிக்குள் நிலவும் இந்த நெருக்கடியான சூழலில் விரிவாகப் பேச முடியாது என்பதாலேயே சந்திப்பு தள்ளிப்போயிருக்கலாம் என்றும், சிலை திறப்பு விழாவைக் கூட ஒத்திவைத்துவிட்டுத்தான் விஜய் சென்னை திரும்பியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.