தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு பதவியேற்று இரண்டு வாரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என பாஜகவைச் சேர்ந்த சரத்குமார் தெரிவித்துள்ளார்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பொதுப்பணியை மறந்து, சுயநலத்திற்காகவும் சுயதேவைக்காகவும் இப்படிப் பதவியை ராஜினாமா செய்து தொகுதி மக்களை ஏமாற்றியுள்ளதாக அவர் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.

மேலும், இந்த ராஜினாமாக்கள் காரணமாகத் தொகுதிகளில் மறுதேர்தல் வரும் சூழல் ஏற்பட்டு, இவர்கள் மீண்டும் போட்டியிட நேரிட்டால், அதற்கான தேர்தல் செலவுகளை இவர்களிடமிருந்தே வசூலிக்க வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

அந்தச் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் செலவையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களின் தேர்தல் செலவையும், ராஜினாமா செய்த அதே சட்டமன்ற உறுப்பினரிடம் அபராதத் தொகையாக வசூல் செய்ய வேண்டும் என்றும், மறுதேர்தல் வரும்போது இப்படிப்பட்ட சுயநலம் கொண்டவர்களைப் பொதுமக்கள் முழுவதுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.