அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களான சத்யபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல் ஆகிய மூன்று பேரும் தங்கள் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர்.

அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து வழங்கிய ராஜினாமா கடிதங்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

பதவியை ராஜினாமா செய்த கையோடு அவர்கள் மூவரும் த.வெ.க கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, அதே அணியைச் சேர்ந்த அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையாவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்த அடுத்தடுத்த ராஜினாமக்கள் காரணமாக தாராபுரம், பெருந்துறை, மதுராந்தகம், அம்பாசமுத்திரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ளதாகவும், அதில் த.வெ.க சார்பில் இவர்களே மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த அரசியல் திருப்பம் குறித்து எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் அரசியல் என்பது எம்.ஜி.ஆர் மரபுக்கும், விஜய் மரபுக்கும் இடையே நடக்கும் ஒரு யுத்தம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக எம்.எல்.ஏ-க்களைத் தன் பக்கம் இழுத்து, எடப்பாடி பழனிசாமியைப் பலவீனப்படுத்துவதன் மூலம் எம்.ஜி.ஆரின் அரசியல் பாரம்பரியத்தை முடிவுக்குக் கொண்டு வர முதலமைச்சர் விஜய் முயல்வதாகவும், ஆனால் இந்த அரசியல் போரின் இறுதியில் எம்.ஜி.ஆரின் மரபே வெல்லும் என்றும் அந்தப் பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.