மேற்கு வங்கத்தின் பராசத் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் காகோலி கோஷ், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

கட்சியின் மாநிலத் தலைவர் சுப்ரதா பக்ஷிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மிகுந்த மனப்போராட்டத்திற்குப் பிறகே இந்த முடிவை எடுத்ததாகவும், இருப்பினும் சாதாரணத் தொண்டராகக் கட்சியில் தொடரப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் அதிகாரப்பூர்வ தடையை மீறி, பாஜக தலைவரும் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி தலைமையில் நடந்த கூட்டத்தில் காகோலி கோஷ் பங்கேற்றதைத் தொடர்ந்தே இந்த அதிரடி ராஜினாமா நடந்துள்ளது.

இந்தச் சந்திப்பிற்குப் பின், தனக்கு இப்போதுதான் சுதந்திரம் கிடைத்துள்ளதாகக் காகோலி கோஷ் தன்னிடம் கூறியதாகச் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், டிஎம்சியின் சுமார் 20 எம்பிக்கள் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக பாஜக தரப்பு கூறினாலும், டிஎம்சி இதனை வெறும் வதந்தி என்று மறுத்துள்ளது.

காகோலி கோஷ் தனது ராஜினாமா கடிதத்தில் டிஎம்சி அரசுக்கு எதிரான ஆசிரியர் நியமன ஊழல், சிறைச்சாலை முறைகேடுகள் மற்றும் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர் மரணம் போன்ற பல முக்கியப் பிரச்சினைகளைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கட்சியின் தேர்தல் உத்திகளை வகுக்கும் ஐ-பேக் அமைப்பின் தலையீடு அதிகரித்துள்ளதாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்களின் ஆதிக்கம் கட்சிப் பணிகளைப் பாதிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியிலேயே, ஃபால்டா இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பின் வட மற்றும் தெற்கு 24 பர்கானா மாவட்டங்களின் ஏழு நகராட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட டிஎம்சி கவுன்சிலர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருப்பது மேற்கு வங்க ஆளுங்கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.