மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பருத்தி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளர்கள் மீது மின்னல் தாக்கியதில் மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதாவது உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று திடீரென பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் கூலித் தொழிலாளர்கள் சிலர் பருத்தி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

திடீரென பயங்கர சத்தத்துடன் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த பகுதிக்கு அருகில் மின்னல் தாக்கியது. இதில், பருத்தி பறித்துக் கொண்டிருந்த ராமுத்தாய், தனிக்கொடி, கணபதி ஆகிய மூன்று பெண் தொழிலாளர்களும் மின்னல் பாய்ந்த வேகத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

மேலும், அவர்களுடன் இருந்த வாசியம்மாள் என்ற பெண் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த  காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பருத்தி பறிக்கச் சென்ற ஒரே பகுதியைச் சேர்ந்த மூன்று பெண் தொழிலாளர்கள் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.