தமிழக அரசியல் களம் தற்போது தவெக மற்றும் அதிமுக மோதலால் ரணகளமாக மாறியிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் வென்று நடிகர் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில், அதிமுக இரண்டாக உடைந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் எஸ்பி வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏக்களான சத்யபாமா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் நேற்று திடீரென தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகினர்.
அவர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்த கையோடு, தலைமைச் செயலக வளாகத்திலேயே அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து தவெகவின் டிஜிட்டல் உறுப்பினர் அட்டையையும் உடனே பெற்றுக் கொண்டனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், இன்று அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையாவும் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். இதனால் தவெகவில் இணைந்த அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
அதிமுக எம்.எல்.ஏக்களின் இந்த அடுத்தடுத்த கட்சி தாவலால் கடுப்பான அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தவெக அரசு மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தங்களின் எம்.எல்.ஏ பதவி பறிபோய்விடும் என்ற பயத்தில்தான் இவர்கள் முன்கூட்டியே ராஜினாமா நாடகத்தை நடத்தியுள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.
மேலும், எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த அடுத்த 5 நிமிடத்திலேயே அச்சிடப்பட்டு, லேமினேஷன் செய்யப்பட்ட தவெக உறுப்பினர் அடையாள அட்டை எப்படி ரெடியாக வந்தது என்று கேள்வி எழுப்பிய அவர், “இது என்ன அரசாங்கம் நடக்கும் தலைமைச் செயலகமா? அல்லது தவெகவின் தலைமை அலுவலகமா?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு உடனடியாக இந்த குதிரை பேரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், விதிகளை மீறி செயல்பட்ட எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய ஏற்கனவே சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளதாகவும் அவர் கொந்தளித்துள்ளார்.
