தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு, தற்போது பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. ஏற்கனவே தவெக அரசுக்கு ஆதரவளித்த அதிமுக எம்.எல்.ஏக்கள் சத்தியபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல் ஆகிய 3 பேரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், இன்று அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையாவும் தனது பதவியை சபாநாயகரிடம் நேரில் சென்று அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் தவெகவில் இணையும் அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி நினைத்ததை இசக்கி சுப்பையா உடைத்தெறிந்துள்ளார் என்றும், அதிமுகவில் ஜனநாயகம் இல்லாத காரணத்தால்தான் அங்கிருந்து அனைவரும் வெளியேறுகிறார்கள் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் மிகக் காட்டமாகப் பேசியுள்ளார்.

திமுகவுடன் ரகசியமாக இணைந்து ஆட்சி அமைக்க அதிமுக முயற்சித்ததால்தான் எம்.எல்.ஏக்கள் தவெகவை நோக்கி வருகிறார்கள் என்று குறிப்பிட்ட அமைச்சர் செங்கோட்டையன், தவெக எந்தவித குதிரை பேரத்திலும் ஈடுபடவில்லை என்றும், முதலமைச்சர் விஜய்யின் சிறப்பான செயல்பாடுகளைப் பார்த்துதான் அவர்கள் தானாக முன்வந்து இணைவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், “ஒவ்வொருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்வது என்பது அவரவர் விருப்பம் சார்ந்த ஜனநாயக உரிமை. நானே எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டுத்தான் தவெகவில் இணைந்தேன்” என்று தன் உதாரணத்தைக் கூறினார்.

எதற்கெடுத்தாலும் எடப்பாடி பழனிசாமி தன்னை மட்டுமே விமர்சிப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை விட தன் படத்தை பெரிதாகப் போட்டுக்கொண்டு, ஜெயலலிதாவைப் புறக்கணித்தவர்தான் எடப்பாடி பழனிசாமி என்றும், அதிமுகவின் இந்த ஒட்டுமொத்த வீழ்ச்சிக்கும் அவர்தான் முழு காரணம் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

புதிய அரசு அமைந்துள்ள நிலையில் 6 மாதங்களுக்கு விமர்சிக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு, தற்போது இப்படி தேவையில்லாமல் குறை கூறுவது முறையல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.