தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையில் தவெக புதிய ஆட்சியை அமைத்துள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த புதிய அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போது நடைபெற்று வரும் தவெக ஆட்சி என்பது முந்தைய திமுகவின் அராஜக ஆட்சியின் தொடர்ச்சிதான் என்றும், இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை என்றும் சாடினார்.
குறிப்பாக, நெல்லை மாவட்டத்தில் கடந்த திமுக ஆட்சியில் எப்படிப்பட்ட அராஜகங்கள் நடந்தனவோ, அதே போன்ற சம்பவங்கள் தான் இப்போதும் அரங்கேறி வருகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார்.
நெல்லை மாநகராட்சியில் பாஜக கவுன்சிலர்கள் மக்கள் நலப் பணிகளுக்காகக் கொண்டு வரும் தீர்மானங்களை தவெக மற்றும் திமுக கவுன்சிலர்கள் திட்டமிட்டுப் புறக்கணிப்பதாகக் கூறிய அவர், இது போன்ற செயல்களால் ஒட்டுமொத்த மாநகராட்சி நிர்வாகமே முடங்கிப் போயுள்ளது என்று ஆதங்கப்பட்டார்.
மேலும், தவெக அரசு மீது மக்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு தவிடுபொடியாகி விட்டதாகவும், முந்தைய திமுக அரசு செய்த அதே தவறுகளைத்தான் இந்த அரசும் அப்படியே நகலெடுத்துச் செய்வதாகவும் நயினார் நாகேந்திரன் மிக ஓப்பனாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
