ஹோர்முஸ் ஜலசந்தியில் நிலவி வரும் கடுமையான போர் நெருக்கடிக்கு மத்தியிலும், அதிகம் அறியப்படாத சுவிஸ் வர்த்தக நிறுவனமான ‘லிட்டன் எஸ்.ஏ.’ ஈராக்கிய எண்ணெயைத் துணிச்சலாகத் தொடர்ந்து விநியோகித்து உலகளாவிய எண்ணெய் சந்தையில் பெரும் லாபம் ஈட்டியுள்ளது.
ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, சண்டைகள் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தி கிட்டத்தட்ட மூடப்பட்டிருந்த சூழலில், இந்த நிறுவனத்தின் உரிமையாளரும் இயக்குநருமான கோடி ஜேம்ஸ் டேவிஸ், பில்லியன் கணக்கில் வருவாய் ஈட்டியுள்ளார்.
பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் காப்பீட்டுக் கட்டண உயர்வு காரணமாகப் பிற நிறுவனங்கள் பின்வாங்கிய நிலையில், இந்த நிறுவனம் சர்வதேச மற்றும் அமெரிக்க முற்றுகைகளைத் தவிர்ப்பதற்காகத் தனது எண்ணெய்க் கப்பல்களின் தானியங்கி அடையாள அமைப்பை அணைத்து, வழித்தடங்களை மிகவும் ரகசியமாக நிர்வகித்துள்ளது.
இவ்வாறு ஆபத்து குறைந்த கடல் வழித்தடங்களையும் நேரங்களையும் உத்தியோடு தேர்ந்தெடுத்ததன் மூலம், சந்தையில் தங்களுக்கு சாதகமான சூழலை இந்நிறுவனம் உருவாக்கிக் கொண்டது. ஹோர்முஸ் ஜலசந்தி பதற்றத்தால் உலகளவில் எண்ணெய் விநியோகம் குறைந்ததால், ஈராக்கிய எண்ணெய்க்கான தேவை பன்மடங்கு அதிகரித்தது.
இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சுவிஸ் நிறுவனம், தங்களின் வசம் இருந்த குறைந்த அளவிலான எண்ணெயை மிக அதிக விலைக்கு விற்று அசுர லாபம் பார்த்துள்ளது. தடைகளைத் மீறிச் செயல்படும் கப்பல்களின் இந்த ரகசியப் பயணம் ஒட்டுமொத்த சர்வதேச எண்ணெய் சந்தையையும் உன்னிப்பாகக் கவனிக்க வைத்துள்ளதாக அந்த அறிக்கை விவரிக்கிறது.
