தமிழகத்தில் முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சிறுநீரக திருட்டு தொடர்பான வழக்கு விசாரணை, தேர்தல் காரணமாகச் சற்று தொய்வடைந்திருந்த நிலையில், தற்போது அது மீண்டும் முழு வீச்சில் தொடங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணையில் எவ்வித அரசியல் தலையீடும் இன்றி, முழு வெளிப்படைத்தன்மையுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும், பொதுமக்கள் அதிகம் நாடும் மாவட்டம் மற்றும் தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை, மருத்துவர்களின் இருப்பு மற்றும் தூய்மையை உறுதி செய்வதே தங்களின் முதன்மை இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் மருத்துவமனைகளுக்கான உரிமம் வழங்கும் நடைமுறையை எளிதாக்கும் வகையில், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவுடனேயே ஓராண்டு செல்லத்தக்க தற்காலிக உரிமம் வழங்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பதாரர்கள் தங்களின் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை வீடியோவாக எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்; பின்னர் ஓராண்டுக்குள் நேரடி கள ஆய்வு நடத்தப்பட்டு 5 ஆண்டுகளுக்கான நிரந்தர உரிமம் வழங்கப்படும்.

இதேபோல், கருத்தரிப்பு மையங்களுக்கான அனுமதி நடைமுறைகளும் எளிதாக்கப்பட உள்ளன. அரசு மருத்துவமனைகளின் தூய்மையை ஊக்குவிக்கும் ‘காயகல்பம்’ திட்டத்தின்கீழ், இனி ஆண்டுக்கு ஒருமுறை என்பதற்குப் பதிலாக 4 முறை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, சிறப்பாகச் செயல்படும் மருத்துவமனைகள் கௌரவிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.