மஹாராஷ்டிர மாநிலம் யவத்மால் நகரின் விதர்பா ஹவுசிங் சொசைட்டி பகுதியில், குற்றப் பின்னணியில் இருந்து விலகி தனியார் நிதி நிறுவனத்தில் வாகனங்களை பறிமுதல் செய்யும் வேலை பார்த்து வந்த சச்சின் சாகன் ரத்தோடு என்ற வாலிபர் வியாழக்கிழமை காலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காவல் துறை ஆவணங்களில் ரவுடியாகப் பதிவாகியிருந்த சச்சின், அண்மையில் பக்குல் என்ற ஷேக் ஷாஹித் என்பவருடன் வாகனப் பறிமுதல் தொடர்பாகத் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக, வியாழக்கிழமை காலையில் சச்சின் தனது நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஷாஹித், அவரிடம் பேச வேண்டும் என்று தனியாக அழைத்துச் சென்று கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார்
சச்சினைக் காப்பாற்ற முயன்ற அவரது நண்பர்களுக்கும் இந்த மோதலில் காயம் ஏற்பட்டுள்ளது. கத்திக் குத்த காயங்களுடன் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிய சச்சின், அங்கிருந்த ஒரு கலாச்சார மையத்தின் அருகே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து சச்சினின் மாமா போலா ராம்லால் ரத்தோடு அளித்த புகாரின் பேரில், அவதூத்வாடி போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவு 103(1)-ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்காக மூன்று சந்தேக நபர்களைக் காவலில் எடுத்துள்ளனர்.
சச்சின் கொடூரமாகக் குத்தப்பட்டு விழுந்த இடத்தில் பெருமளவு ரத்தம் சிதறிக்கிடந்த கொடூரக் காட்சி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
