திமுக தனது கூட்டணி குறித்துச் சிந்திக்க வேண்டிய நேரம் இது என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுகவைத் தனித்து வலுப்படுத்தினால், எந்தவொரு கூட்டணியும் இல்லாமலேயே அனைத்துத் தொகுதிகளிலும் நம்மால் வெற்றி பெற முடியும் என்றும், திமுக யார் என்பதை அனைவருக்கும் காட்ட முடியும் என்றும் பேசியுள்ளார்.
அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட முன்னாள் கூட்டணிக் கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளித்துள்ள நிலையிலும், காங்கிரஸ் தவெக-வுடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் பங்கேற்க உள்ள சூழலிலும், கனிமொழியின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மேலும், இந்த சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றிருந்தாலும், தூத்துக்குடி தொகுதியில் கீதா ஜீவன் அடைந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.
யாரும் எதிர்பார்க்காத இந்த தோல்விக்கான கள நிலவரத்தை ஆராயவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாகச் சிறப்புக் குழுக்களை அமைத்துள்ளார் என்றும், இந்தக் குழுவிடம் நிர்வாகிகள் உண்மை நிலவரத்தை மட்டுமே கூற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தொகுதிப் பங்கீட்டின் போது “தொகுதியைக் கூட்டணிக்குக் கொடுத்துவிடாதீர்கள்” என்று நிர்வாகிகள் தொடர்ந்து கோரிக்கை வைப்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவரது இந்த உரை, வரும் நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் திமுகவின் கூட்டணி நிலைப்பாடு மாறுமா என்ற விவாதத்தை அதிகரித்துள்ளது.
