சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜராஜசோழன் என்பவரின் மகள் அபிநயா (12). ஏழாம் வகுப்பு படித்து வந்த இவருக்குத் தற்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அபிநயா தனது தாயுடன் ஆடு மேய்ப்பதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது ஆடுகளைக் கவனித்துக் கொள்ளுமாறு மகளிடம் கூறிவிட்டு, சிறுமியின் தாயார் மட்டும் சில வேலைகளுக்காக வீட்டிற்குத் திரும்பியுள்ளார். ஆனால், மாலை நேரமாகியும் சிறுமி அபிநயா வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவளைப் பல இடங்களில் தேடியுள்ளனர்.
மாலையில் ஆடுகள் மட்டுமே வீட்டிற்குத் திரும்பிவந்ததால் ஒட்டுமொத்தக் குடும்பமும் பெரும் பதற்றமடைந்தது. இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள ஊருணித் தண்ணீரில் சிறுமி அபிநயா பிணமாக மிதப்பது கண்டு கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காகச் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோடை விடுமுறையில் ஆடு மேய்க்கச் சென்ற சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்; பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் எனப் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
