கேரளா மாநிலம் கோழிக்கோடு மங்காவு பகுதியில், கட்டப்பனையில் இருந்து புல்பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த கே.எஸ்.ஆர்.டி.சி ஸ்விஃப்ட் பேருந்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்தப் பேருந்தில் பயணம் செய்த இளம் பெண் ஒருவர், தனக்குத் தேவையான ஒரு தனியார் மருத்துவமனைக்கு முன்னால் பேருந்தை நிறுத்தும்படி கேட்டுள்ளார்.

ஆனால், அது பேருந்து நிறுத்தம் இல்லாத இடம் என்பதால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்த மறுத்துத் தொடர்ந்து ஓட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், பேருந்தின் பக்கவாட்டுக் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளார்.

பேருந்தின் பொதுச் சொத்தைச் சேதப்படுத்தியதால் அங்கிருந்த கே.எஸ்.ஆர்.டி.சி அதிகாரிகள் உடனடியாகப் பிரச்சினையில் தலையிட்டனர். கண்ணாடியை உடைத்த அந்தப் பெண்ணிற்கு அதிகாரிகள் அதிரடியாக 25,000 ரூபாய் அபராதம் விதித்து, அந்தப் பணத்தை அவரிடமிருந்து வசூலித்தனர்.

“>

 

அபராதத் தொகை வசூலிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சுமுகமாக முடிக்கப்பட்டு, பேருந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. நெடுமங்காடு கே.எஸ்.ஆர்.டி.சி டிப்போவுடன் தொடர்புடைய சமூக ஊடகப் பக்கம் ஒன்றின் வழியாகவே இந்த விசித்திரமான சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.