ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசு, அந்நாட்டின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டை மேம்படுத்த இந்திய நிறுவனமான TCRC உடன் சுமார் 400 கோடி ரூபாய் (46.3 மில்லியன் டாலர்) மதிப்பிலான ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, காபூல் மற்றும் நாட்டின் ஒன்பது முக்கிய எல்லைப் பகுதிகளில் அதிநவீன ஆய்வகங்கள் மற்றும் சோதனை மையங்கள் அமைக்கப்படும்.

இதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்குள் நுழையும் கட்டுமானப் பொருட்கள், மின்சாதனங்கள் மற்றும் ஜவுளிப் பொருட்களின் தரத்தை சர்வதேச அளவில் உறுதி செய்யவும், தரமற்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்கவும் தலிபான்கள் திட்டமிட்டுள்ளனர்.

பாகிஸ்தானுக்கும் தலிபான்களுக்கும் இடையே எல்லைப் போர் மற்றும் மோதல்கள் முற்றியுள்ள நிலையில், தலிபான்கள் இந்தியாவின் உதவியை நாடியிருப்பது சர்வதேச அரசியலில் பெரும் மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த 5 ஆண்டு கால ஒப்பந்தத்தின் கீழ், இந்திய நிறுவனம் ஆப்கானிய ஊழியர்களுக்குத் தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்குவதோடு, சர்வதேச அங்கீகாரம் பெற்ற ISO சான்றிதழைப் பெறவும் உதவும்.

பாகிஸ்தானுடனான எல்லைகள் அடிக்கடி மூடப்படுவதால் ஏற்படும் உணவுப் பொருட்கள் விலை உயர்வைத் தவிர்க்கவும், உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கவும் இந்திய நிறுவனத்துடனான இந்த உறவு தங்களுக்குப் பெரிதும் உதவும் என்று தலிபான் தரப்பு நம்புகிறது.