அகில்யா நகரில் “உங்கள் வீட்டுக்கு அடியில் புதையல் இருக்கிறது” என்று கூறி ஒரு குடும்பத்தை ஏமாற்றி 50 ஆயிரம் ரூபாய் பறித்த போலி சாமியார் மற்றும் அவரது உறவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சோனாலி என்பவரது கணவருக்கு வேலை இல்லாததால் அந்த குடும்பம் பண நெருக்கடியில் இருந்துள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்ட சிவ சோனாவனே என்ற போலி சாமியார், சிறப்பு பூஜை செய்தால் வீட்டுக்கு அடியில் இருக்கும் தங்கத்தைப் பெற்றுத் தருவதாக ஆசை காட்டியுள்ளார்.
இதை நம்பிய குடும்பத்தினர், அந்த சாமியார் சொன்னபடி தங்களுடைய சொந்த வீட்டை இடித்து, நள்ளிரவில் எலும்பு மற்றும் எலுமிச்சை பழங்களைக் கொண்டு மந்திரங்கள் ஓதி பூஜையும் செய்துள்ளனர்.
புதையலை எடுத்துத் தருவதற்காக 50 ஆயிரம் ரூபாயை வாங்கிய அந்த கும்பல், நீண்ட நாட்களாகியும் சொன்னபடி தங்கத்தை எடுத்துக் கொடுக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டபோது, பணத்தைக் கொடுக்க மறுத்ததுடன், மீண்டும் பணம் தராவிட்டால் பில்லி சூனியம் வைத்து குடும்பத்தையே அழித்துவிடுவேன் என்று அந்த போலி சாமியார் மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சோனாலி போலீசில் புகார் அளித்தார். தங்கம் கிடைக்கும் என்ற ஆசையில் சொந்த வீட்டை இழந்த அந்தக் குடும்பத்தின் நிலை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போலி சாமியார்களின் பேச்சை நம்பி ஏமாற வேண்டாம் என்று போலீசார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
