மும்பை அருகே உள்ள நல்லாசோபரா பகுதியில், சாலையோர இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்த நைஜீரியப் பெண் ஒருவரை இன்ஃப்ளூயன்சர் என்ற போர்வையில் இருந்த வாலிபர் ஒருவர் தடியால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலைத் தன் மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்த அந்த நபர், இன்ஸ்டாகிராமில் ‘வியூஸ்’ (Views), லைக்ஸ் மற்றும் ஃபாலோயர்களை அள்ளுவதற்காக அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். இந்த நெஞ்சை உலுக்கும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவியதை அடுத்து, பொதுமக்களும் நெட்டிசன்களும் அந்த நபருக்கு எதிராகக் கொதித்தெழுந்தனர். மனிதநேயமற்ற இந்தச் செயலுக்குக் கடுமையான கண்டனங்கள் குவிந்ததோடு, சம்பந்தப்பட்ட நபர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.

 

View this post on Instagram

 

A post shared by Janseva Sanket (@jansevasanket)

நெட்டிசன்களின் கடுமையான கொந்தளிப்பைத் தொடர்ந்து, உள்ளூர் போலீஸார் அதிரடியாகக் களமிறங்கி வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் அந்த வாலிபரைக் கைது செய்து சிறையிலடைத்தனர். இதனையடுத்து, போலீஸ் காவல் வளையத்தில் கைகளைக் கட்டியபடி இருக்கும் அந்த வாலிபரின் புதிய வீடியோ ஒன்றை போலீஸார் வெளியிட்டுள்ளனர். அதில், “சமூக வலைத்தளங்களில் வெறும் பிரபலம் அடைவதற்காக நான் செய்த இந்தச் செயல் அசிங்கமானது, மன்னிக்க முடியாதது” என்று அவர் பொதுமன்னிப்புக் கேட்டுள்ளார். ஆன்லைன் புகழுக்காகவும், விளம்பரத்திற்காகவும் மற்றவர்களின் பாதுகாப்பையும், கண்ணியத்தையும் சீர்குலைக்கும் வகையில் வீடியோக்களை உருவாக்கும் ‘கண்டென்ட் கிரியேட்டர்களுக்கு’  இச்சம்பவம் ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.