மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரின் லசூடியா பகுதியில் உள்ள மின்சார வாகன (EV) ஷோரூமில், வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஷோரூமில் இருந்து மளமளவென எழும்பிய தீயும், கட்டிடத்தை சூழ்ந்த அடர்ந்த கரும்புகையும் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இந்த தீ விபத்தால், ஷோரூம் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் தளங்களில் வசித்து வந்த 6 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 20 பேர் வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். கரும்புகை ஒட்டுமொத்த கட்டிடத்தையும் மூடியதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிருக்காக போராடும் இக்கட்டான சூழ்நிலை உருவானது.
#WATCH | Fire At EV Showroom In Indore: Couple, Along With A Child, Descend To Narrow Window Roof Of A Building To Escape Blaze #IndoreFire #IndoreNews #MadhyaPradesh pic.twitter.com/zaf9Tdfkex
— Free Press Madhya Pradesh (@FreePressMP) June 5, 2026
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினர், உள்ளூர் மக்களின் உதவியோடு அதிரடி மீட்புப் பணியில் இறங்கினர். அலைமோதிய தீக்கும், அச்சுறுத்திய புகைக்கும் இடையே ஏணிகள் மற்றும் கயிறுகளைப் பயன்படுத்தி, சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு உள்ளே சிக்கியிருந்த 20 பேரையும் பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
