மத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியைச் சேர்ந்த 60 வயது விவசாயி ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது வழியில் நின்றிருந்த இளம்பெண் ஒருவர், அவரிடம் அவசரமாகச் செல்ல வேண்டும் எனக் கூறி லிப்ட் கேட்டுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் அந்த முதியவரும் அவரைத் தனது வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார். ஆனால், அந்தப் பெண் முதியவரை நயமாகப் பேசி ஏமாற்றி, அவருடன் பழகியுள்ளார். ‘கரும்பு தின்ன கூலியா’ என்ற பழமொழிக்கு ஏற்ப, தனக்கு உதவிய முதியவருக்கு கைமாறாக அந்தப் பெண் எச்.ஐ.வி தொற்றைப் பரிசாக அளித்துள்ள கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட முதியவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டார். அப்போது அவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண் திட்டமிட்டே முதியவரை ஏமாற்றி இந்த விபரீதத்தை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அந்தப் பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
