ஏமன் நாட்டின் அல்-தாலே மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஹரதாத் தம்த்’ என்ற எரிமலை பள்ளத்தில், ஆபத்தான முறையில் சாகசம் செய்து வந்த அல்-காகா பின் அன்தர் என்ற இளம் சாகச வீரர், நிலைதடுமாறி உள்ளே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 120 மீட்டர் ஆழமும், செங்குத்தான பாறைகளும் கொண்ட இந்த எரிமலை பள்ளத்தின் உட்புறச் சுவர்களில், எந்தவிதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி அவர் ஏறி சாகசம் செய்தபோது இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. அவர் கால்தவறி பாதாளத்திற்குள் விழும் அதிர்ச்சியூட்டும் நேரடி வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

 

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த ஆபத்தான பகுதியில் உரியப் பாதுகாப்பு வழிமுறைகள் இன்றி சாகசங்கள் செய்ய வேண்டாம் என்று உள்ளூர் மக்களும், அதிகாரிகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தனர். விபத்து நடந்தவுடன் மீட்புக் குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டும், கடினமான நிலப்பரப்பு மற்றும் போதிய அவசரக்கால கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மீட்புப் பணிகள் தாமதமானதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அங்கு வந்த மீட்புப் படையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கயிறுகளின் உதவியுடன் அவரது உடலை மீட்டனர். இந்தச் சம்பவம், உரியப் பாதுகாப்பு அனுமதியின்றி உயிரைப் பணயம் வைத்துச் செய்யப்படும் சாகசங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.