பீகாரின் கதிஹார் மாவட்டத்தில், தனது மனைவியின் அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு அவப்பெயரை ஏற்படுத்திய குற்றத்திற்காகத் தயானந்த் குமார் என்ற கணவரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
2023-ல் திருமணம் செய்துகொண்ட தயானந்த், தனது மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்டு, அவரைப் பழிவாங்கும் நோக்கில் இந்த அநாகரிகச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிரபலம் தேடும் நோக்கமும் அவரிடம் இருந்ததாகக் கூறப்படுகிறது. மனைவியின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த தயானந்தை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட தயானந்தின் கைபேசியைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், அதில் இருந்த ஆதாரங்களை தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர். விசாரணையின்போது, குற்றவாளி தனது மனைவியின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டதை ஒப்புக்கொண்டார்.
இத்தகைய செயல்கள் கடுமையான தண்டனைக்குரிய குற்றங்கள் என்று எச்சரித்துள்ள சைபர் பிரிவு டிஎஸ்பி, அந்தத் தகவல்கள் வேறு ஏதேனும் தளங்களில் பகிரப்பட்டுள்ளதா என்பது குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தனிப்பட்ட விரோதத்திற்காகப் பெண்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் இத்தகைய செயல்களைச் சட்டப்படி கடுமையாக எதிர்கொள்ளப்போவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
