தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் மியாப்பூர் பகுதியில் உள்ள மயூரி நகரில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 6-வது மாடியில் இருந்து குதித்து 37 வயதான பெண் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது ஈஷா சாஹு என்ற அந்த ஐடி பெண் இன்ஜினியர், தனது 6 மாத பெண் குழந்தையை நெஞ்சோடு அணைத்தபடி திடீரென 6-வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். ஆனால், அவர்கள் கீழே விழும்போது எதிர்பாராதவிதமாகக் காற்றில் அந்தப் பிஞ்சு குழந்தை தாயின் கையை விட்டு நழுவி தனியாகத் தூக்கி வீசப்பட்டது. இதில் ஈஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்; ஆனால், அவரது குழந்தை லேசான காயங்களுடன்  உயிர் பிழைத்தது.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாகக் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது குழந்தைக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்துப் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஈஷா கடந்த சில மாதங்களாக ‘இன்சோம்னியா’ (Insomnia) எனப்படும் கடுமையான தூக்கமின்மை நோயால் அவதிப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவித்து வந்த அவர், கடுமையான மன அழுத்தத்திற்கு (Depression) உள்ளாகி இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.