இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழக முதல்வர் விஜய்க்கு ஆதரவாகக் குரல் எழுப்பப்பட்ட நிலையில், அதற்குச் சிங்கள அமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, யாழ்ப்பாணத்தை ஆளுவதற்குத் விஜயை அழைப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் விடுத்துள்ள காட்டமான அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“யாழ்ப்பாணத்தை ஆள விஜயை அழைப்பதானது சிங்கள மக்களின் பொறுமையைச் சோதிக்கும் செயல். தளபதி விஜய் அவர்களே! எங்கள் நாட்டை நோக்கி விரல் நீட்ட வேண்டாம். நீங்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மட்டுமே; ஒட்டுமொத்த இந்தியாவின் தலைவரோ அல்லது பிரதமரோ அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முயன்றால் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உங்களுக்குத் தக்க பதிலடி கொடுப்போம்.
மேலும், நாடாளுமன்றத்தில் விஜய்க்கு ஆதரவாகப் பேசிய அர்ச்சுனா எம்.பி-யைக் கடுமையாகச் சாடிய தேரர், “இதே கருத்தை அவர் சபைக்கு வெளியே பேசியிருந்தால், வீதியில் கூட நடமாட முடியாது” என்று பகிரங்கமாக எச்சரித்தார். இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் உதவிப் பணிப்பாளர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தில் வெளியான செய்திகள் அதிர்ச்சியளிப்பதாகவும், இது உண்மையானால் அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தேரர் வலியுறுத்தினார். தமிழக அரசியலில் தடம் பதித்து முதலமைச்சராகியுள்ள விஜய்யின் புகழ், அண்டை நாடான இலங்கையின் அரசியல் களத்திலும் பெரும் விவாதப் பொருளாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
