தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளால் ஏற்பட்டுள்ள அரசியல் முட்டுக்கட்டைக்கு மத்தியில், தி.மு.க ஆதரவுடன் அ.தி.மு.க ஆட்சி அமைக்கப் போவதாகப் பரவி வரும் செய்திகளை தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி திட்டவட்டமாக மறுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, தமிழக அரசியலில் தற்போது நிலவும் சூழல் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது,

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு அசாதாரணமான குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது உண்மைதான். ஆனால், அதற்காக தி.மு.க – அ.தி.மு.க இணைந்து ஆட்சி அமைக்கும் என்று வெளியாகும் தகவல்கள் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றவை. தி.மு.க ஆதரவுடன் அ.தி.மு.க ஆட்சி அமைகிறது என்பது வெறும் வதந்தி. இதுபோன்ற கற்பனையான செய்திகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

த.வெ.க ஆட்சி அமைக்க உரிமை கோரியும், பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் அவகாசம் தராதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஆளுநர் பதவியே தேவையில்லை என்பதுதான் தி.மு.க-வின் நீண்டகால மற்றும் உறுதியான நிலைப்பாடு” என்று மீண்டும் வலியுறுத்தினார்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் அதன் பலம் 113-ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், ஆட்சி அமைக்க இன்னும் 5 எம்.எல்.ஏ-க்கள் தேவைப்படுகின்றனர். இந்தச் சூழலில், திராவிடக் கட்சிகள் ஒன்றிணைந்து த.வெ.க-வைத் தடுக்கும் என்று பரவிய பேச்சுக்கு கனிமொழியின் இந்தப் பேட்டி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தற்போது கம்யூனிஸ்ட் மற்றும் வி.சி.க கட்சிகளின் முடிவை நோக்கித் தமிழகமே காத்திருக்கிறது.

இதே போன்று திமுகவின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவனம் திமுக மற்றும் அதிமுக என்பது பரம எதிரிகள் கண்டிப்பாக கூட்டணி என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்று கூறியுள்ளார். மேலும் அதிமுக கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் அதிமுக மற்றும் திமுக கூட்டணியை மறுக்காத நிலையில் தற்போது திமுக தலைவர்கள் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.