நடிகர் விஜய்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், அவர் மீது வருமான வரிச் சட்டம் மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராஜ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி, அதனைப் பதிவு செய்ய உயர்நீதிமன்றப் பதிவாளர் துறை மறுத்துவிட்டது. பதிவகத்தின் இந்த முடிவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரு மனுவை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, பதிவாளர் துறை தன்னிச்சையாக முடிவு செய்ய முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
மனுவின் தகுதி குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதனை உரிய முத்திரையுடன் பதிவு செய்து சம்பந்தப்பட்ட நீதிபதியின் பார்வைக்கு அனுப்ப வேண்டும் என்று பதிவகத்திற்கு உத்தரவிட்டனர். இதன் மூலம் நடிகர் விஜய் மீதான அந்த மனுவை விசாரணைக்கு எடுப்பதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
