தர்மசாலாவில் மழையின் காரணமாக 25 ஓவர்களாகக் குறைத்து நடத்தப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, ரஹ்மானுல்லா குர்பாஸின் அதிரடி சதத்தின் (116 ரன்கள்) உதவியுடன் 24.5 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர்களான குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, கேப்டன் சுப்மன் கில்லின் அதிரடி அரைசதம் (84* ரன்கள்), இஷான் கிஷன் (34), கே.எல்.ராகுல் (39*) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 22.5 ஓவர்களில் இலக்கை எட்டி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. சுப்மன் கில் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
Priorities, no matter your age or occupation 😂💗 pic.twitter.com/mBWkO6Sq8n
— Rajasthan Royals (@rajasthanroyals) June 13, 2026
இந்த வெற்றிக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு நெகிழ்ச்சியான சுவாரசியமான சம்பவம் அரங்கேறியது. ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 302 ரன்கள் மற்றும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய இளம் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது தாயாரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
செய்தியாளர் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த போதே, அந்த அழைப்பை ஏற்ற நிதிஷ் ரெட்டி, “அம்மா, இன்னும் ஐந்து நிமிடங்களில் கூப்பிடுகிறேன்” என்று கூறி போனை வைத்தார். பின்னர், தனது பேட்டி தடைபட்டதற்காக அங்கிருந்த செய்தியாளர்களிடம் புன்னகையுடன் மன்னிப்பு கேட்டார். மைதானத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டிய இளம் வீரர், செய்தியாளர்கள் சந்திப்பில் தாயின் அழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த இந்த அழகான நிமிடம் அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது.
