திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே, முதல் மனைவி மற்றும் இரு குழந்தைகளை விட்டுவிட்டு, சடையாண்டி என்ற நபர் மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சடையாண்டி அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசி வந்ததால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டு அவர் திடீரென மாயமானார்.

இது குறித்து மனைவி சுமதி போலீஸில் புகார் அளித்த நிலையில், விசாரணையில் சடையாண்டி நாகேஷ்வரி என்ற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்து வாழ்ந்து வருவது தெரியவந்தது.

சடையாண்டியை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தபோது, “எனக்கு இரண்டு மனைவிகளுடனும் சேர்ந்து வாழ சம்மதம், இருவரையும் என்னுடன் அனுப்பி வையுங்கள்” என்று அவர் கூறியதைக் கேட்டு போலீஸாரே அதிர்ச்சியடைந்தனர்.

இருப்பினும், சடையாண்டியின் முதல் மனைவி சுமதி தனது இரு பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, கணவரைத் தன்னுடனே அனுப்பி வைக்குமாறு போலீஸாரிடம் மன்றாடினார்.

இதற்கு மறுபுறம், நாகேஷ்வரியும் சடையாண்டியுடன் வாழ விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், முதல் மனைவி இருக்கும்போதே இரண்டாவதாகத் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்பதைச் சுட்டிக்காட்டிய போலீஸார், அவர் மீது வழக்குப்பதிவு செய்தால் சிறைக்குச் செல்ல நேரிடும் என்று எச்சரித்தனர்.

பின்னர், நாகேஷ்வரியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்த போலீஸார், சடையாண்டியைத் தனது முதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து வாழ அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.