கடலூர் மாவட்டம்  பெரியகாட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (27) என்ற வாலிபர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். பின்னர், அந்த வீடியோவை காட்டி, தனது ஆசைக்கு இணங்குமாறு அந்தப் பெண்ணை வற்புறுத்தி மிரட்டி வந்துள்ளார். தனது பேச்சைக் கேட்கவில்லை என்றால், அந்த வீடியோவை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி இணையத்தில் கசியவிட்டு விடுவதாகத் தொடர்ந்து அச்சுறுத்தியும் வந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று அந்த இளம்பெண்ணை அருகில் உள்ள முந்திரித் தோட்டத்திற்கு வருமாறு பிரகாஷ் அழைத்துள்ளார். ஆனால், அதற்கு அந்தப் பெண் வர மறுப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பிரகாஷ், தான் மறைத்து வைத்திருந்த அந்த ரகசிய வீடியோவை அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பர்களான கோகுல் மற்றும் இளவரசன் ஆகியோருக்கு அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண், உடனடியாக காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி பிரகாஷ், கோகுல், இளவரசன் ஆகிய 3 பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.