ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேலு , தையல் கடை நடத்தி வந்தார். இவரது பேரக் குழந்தைகளான அஜய் , குணஸ்ரீ மற்றும் உறவினர் நிர்மலாவின் மகன் அஸ்வந்த் ஆகிய 3 பேரும் காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தனர். நேற்று காலை வேலு தனது பேரக் குழந்தைகளை பள்ளியில் விடுவதற்காக ஓச்சேரியில் இருந்து தனது ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றுள்ளார். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கம் அருகே அவர்கள் சென்றபோது, சென்னையில் இருந்து வேலூர் நோக்கி அதிவேகமாக வந்த ஐஸ்கிரீம் ஏற்றி வந்த வேன் ஒன்று, எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டரின் பின்பக்கத்தில் பலமாக மோதியது.
இந்த பயங்கர விபத்தில் ஸ்கூட்டரில் இருந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதில் வேலு, குணஸ்ரீ, அஸ்வந்த் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு போராடிய சிறுவன் அஜய் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த விபத்து குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியைச் சேர்ந்த சரக்கு வேன் டிரைவர் ஜெயசூர்யா என்பவரை போலீசார் பிடித்து தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்குச் சென்ற வழியில் தாத்தா மற்றும் பிஞ்சுக் குழந்தைகள் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
