சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ரஞ்சிதா (23) என்ற இளம்பெண்ணுக்கும், கிண்டி நாகிரெட்டி தோட்டத்தைச் சேர்ந்த குமாரேஷ் (26) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. வடபழனியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் குமரேஷ் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரஞ்சிதா தனது தாயார் வீட்டிற்குச் சென்று வாழத் தொடங்கினார். பிரிந்திருந்த போதிலும் ரஞ்சிதா தனது கணவருடன் செல்போன் மூலம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். கடந்த வியாழக்கிழமையன்று ரஞ்சிதா தனது கணவருக்குப் பலமுறை போன் செய்துள்ளார். ஆனால், குமரேஷ் அவரிடம் பேச மறுத்ததோடு, ரஞ்சிதாவின் செல்போன் எண்ணையும் ‘பிளாக்’ (முடக்கம்) செய்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ரஞ்சிதா அன்று இரவே வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வேளச்சேரி காவல்துறையினர், ரஞ்சிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடந்த உடற்கூறாய்வில், தற்கொலை செய்து கொண்ட ரஞ்சிதா கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவருடன் ஏற்பட்ட தகராறு மற்றும் அவர் செல்போன் எண்ணை பிளாக் செய்த மனவேதனை தான் ரஞ்சிதாவின் தற்கொலைக்குக் காரணமா? அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா? என்பது குறித்து வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருமணமான 6 மாதங்களிலேயே இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.