பிரேசில் நாட்டின் சாவோ பாலோ மாகாணத்தில் உள்ள லைமிரா நகரில், நெஞ்சை உலுக்கும் பயங்கர விபத்து ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள ‘ஸ்கெலட்டன் பிரிட்ஜ்’ (Skeleton Bridge) என்ற பாலத்தில், ‘என்ட்ரே கோர்டாஸ்’ என்ற தனியார் நிறுவனம் சார்பில் ‘பங்கி ஜம்பிங்’ (Bungee Jumping) எனப்படும் கயிற்றில் கட்டி உயரத்தில் இருந்து குதிக்கும் சாகச விளையாட்டு நடத்தப்பட்டது.

அப்போது, மரியா எடுஆர்டா ரோட்ரிக்ஸ் டி ப்ரீடாஸ் என்ற 21 வயது இளம் பெண், இந்த சாகச விளையாட்டை விளையாட ஆசையுடன் வந்துள்ளார். பாலத்தின் மீது நின்றிருந்த மூன்று ஊழியர்கள் அந்தப் பெண்ணைக் குதிக்க வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தப் பெண்ணின் உடலில் முக்கிய பாதுகாப்பு கயிற்றை  சரியாகக் கட்ட ஊழியர்கள் மறந்துவிட்டனர்.

 

பாதுகாப்பு கயிறு கட்டப்படாததை கவனிக்காத ஊழியர்கள், அந்தப் பெண்ணை பாலத்தில் இருந்து கீழே தள்ளியுள்ளனர். இதனால் அந்த 21 வயது இளம் பெண், எந்தவொரு பாதுகாப்பும் இன்றி மிக உயரமான பாலத்தில் இருந்து நேரடியாகக் கீழே விழுந்து, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த பயங்கர அலட்சியம் தொடர்பாக, சாகச விளையாட்டை நடத்திய நிறுவனத்தைச் சேர்ந்த 6 ஊழியர்களைப் போலிஸார் தற்போது கைது செய்துள்ளனர். இது போன்ற சாகச விளையாட்டுகளில் ஈடுபடும் போது, பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பை சுய பரிசோதனை செய்து குறைந்தது 3 முறையாவது உறுதி செய்து கொள்ள வேண்டும் எனப் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.