பீகார் மாநிலம் பெிகுசாய் பகுதியில் பைக் விபத்தில் சிக்கி தீவிர காயமடைந்த குணால் குமார் என்ற இளைஞர், உள்ளூர் மக்களால் மீட்கப்பட்டு மஞ்ஜோல் துணை மருத்துவமனைக்கு சிகிச்சைக் கொண்டு செல்லப்பட்டார். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சைகள் கிடைக்காமல் அவரது குடும்பத்தினர் மற்றும் நோயாளிகள் பரிதவித்தனர். மருத்துவமனையில் முறையான மருத்துவ வசதிகள் இல்லாததால், காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு உரிய பிளாஸ்டர் அல்லது முறையான ஸ்பிளிண்டுகளுக்குப் பதிலாக, சாதாரண அட்டைப் பெட்டி துண்டுகளை வைத்துக் காலில் கட்டி முதலுதவி செய்ததாகக் குடும்பத்தினர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளனர்.

மருத்துவப் படுக்கையில் வலியால் அந்த இளைஞர் துடிக்கும் இந்த அவலக் காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அந்த நபர் பெிகுசாய் சதாார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்குள்ள மருத்துவமனை பொறுப்பாளர் டாக்டர் அபினவ் பிரியதர்ஷி கூறுகையில், அவசர கால சிகிச்சையின் போது எலும்பு நகராமல் இருக்க தற்காலிகமாக இதுபோன்ற அட்டைகளைப் பயன்படுத்துவது மருத்துவ முறைப்படி தவறு கிடையாது என்று விளக்கமளித்துள்ளார். ஆனால், சம்பவம் நடந்த சமயம் மருத்துவமனையில் எலும்பு முறிவு சிறப்பு மருத்துவரோ அல்லது முறையான பணியாளரோ பணியில் இல்லை என்பதை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பெிகுசாய் சிவில் சர்ஜன் டாக்டர் அசோக் குமார் இந்தச் சம்பவம் குறித்து உயர்தர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். முதலுதவி சிகிச்சையின் போது நிலைமையைச் சமாளிக்க தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், இதில் ஏதேனும் மருத்துவத் தரக்குறைவோ அல்லது பணியாளர்களின் அலட்சியமோ இருப்பது உறுதியானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் நிலவும் உள்கட்டமைப்பு மற்றும் அவசர கால மருத்துவர்களின் பற்றாக்குறை குறித்து பொதுமக்கள் மத்தியில் இந்தச் சம்பவம்  விவாதத்தைக் கிளப்பியுள்ளது.